Saturday, March 9, 2013

மரண அறிவிப்பு..!


 
நம் ஊரைச்சார்ந்த ஜனாப் நூர் முகமது அவர்களின் மகனும், கேப்பைக்கலி என்கிற ஜனாப். நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், ஜனாப். பஷீர் மற்றும் ஜனாப். அஷ்ரப் ஆகியோரின் சகோதரரும், ஜனாபா. ஹாசர் அம்மாள் அவர்களின் கணவருமான ஜனாப். ஹபீபுல்லா அவர்கள் 05-03-13 அன்று சவுதியின் ரியாத் நகரில் அதிகாலை மாரடைப்பால் காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

 "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா 08-03-13 அன்று சவுதியின் ரியாத் நகரில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ்கொடுப்பானாக. ஆமீன்.

Friday, July 6, 2012

மரண அறிவிப்பு..!



நம் ஊரின் ரஹ்மத் நகரைச் சேர்ந்த N. M. முகைதீன் பக்கீர் அவர்களின்  மனைவியும், ஜனாஃப் அப்துல் முனாஃப் அவர்களின் தாயாரும், ஜனாஃப் அப்துல் சமது, முகமது மைதீன், அபுல்ஹசன், நெய்னா முகமது மற்றும் தீன் முகமது அவர்களின் சகோதரியுமான ஜனாபா. அஹமது தாயார் அவர்கள் 05-07-12 அன்று மாலை காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

 "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா புதுப்பட்டினம் ரஹ்மத் நகரில் இருக்கும் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு, மறுநாள் காலை 9 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ்கொடுப்பானாக. ஆமீன்.





Saturday, September 3, 2011

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு...!

 
சவுதியில் "ஹுரூப்" "Run away " "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று ஹுரூப் என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோகியேசன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் முக்கிய நோக்கம்:

சவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால் சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலையும், வேலைக்கு தகுந்த ஊதியமின்மையும், உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காததும் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லொணாத் துயரங்கள்  போன்ற செயல்களை கண்டிக்கும் உரிமையை, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்படவேண்டும். இந்திய தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படவேண்டும் 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க வேண்டும், இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று

சவூதி அரேபியாவில் செயல்படும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில மாதங்களுக்கு முன்)  இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து வருவது போல் 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல அமைச்சகத்திடம் முறையிட்ட போது முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக முறையிடும் முதல் புகாராக உள்ளது என்று வியந்து பாராட்டினார். இன்ஷா அல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம் என்று சொல்லிய அமைச்சகம் முதலில் தங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் http://www.hurub.com என்ற இணைய தளம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு செய்யவும். இதில் உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள் பாதிக்கபட்டு சட்ட உதவி தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள் முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில் பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஹூரூப் என்று சொல்லக்கூடிய சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒருவரிடம் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும் முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம் வழங்க வேண்டும் அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை ஜவாசத்தில் (பாஸ்போர்ட் அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார் செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியாளில் சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர் ஹுரூப் சட்டத்தின் கீழ் வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 3ம் தேதி தற்போதுள்ள இந்தியத் தூதர் தனது பணிக்காலம் முடித்து திரும்பிச் செல்கிறார். புதிய தூதர் அடுத்த 15 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். புதிய தூதர் UNல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர் பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ் கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

சவூதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் இந்த இணைய முகவரியில் 
http://www.hurub.com பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: இந்த மின்அஞ்சலை அனைத்து சகோதரர்களுகம் அனுப்பி வைக்கவும். முடிந்தால் இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும். 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்.


நன்றி: மின்னஞ்சல்

Wednesday, August 3, 2011

வெளியூர் செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை.!




அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள்.   நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

இருவரும் சம வயது உடையவர்கள்.   சுமார் 25 வயது இருக்கும்.   அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர்.   இன்னொரு பெண்மணி அவரது தோழி.   அந்த நோயாளிப் பெண் அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம். அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது. உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக் கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற பரபரப்பில் இருந்தனர்.   அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.  அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். 

இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும். கணவன் மனைவி போலத் தோன்றியது.   ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள் எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க, அதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல, ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்" என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க, அடுத்த சில வினாடிகளில்  தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும் உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர்.   ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது. 
மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல 5 நிமிடம் கூட ஆகாது.   ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகு தூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது.   என்ன
செய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!" என்று கதறியழ ஆரம்பித்தனர். 

உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்று மிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக் கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள்.  முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே,  முஸ்லிம் பெண் நிலை குலைந்து போனாள்.   உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும் செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு,  இருவரையும் ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். 

அந்த அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன் சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள். அல்ஹம்துலில்லாஹ்.  பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார். 

மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக் கொண்டது.  அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன. நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள். இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. 

1.  ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
2.  வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்
பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.
3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.
4.  செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின்
மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும்.   ( உ-ம் ப்ளவ்ஸ் உள்ளே)
5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்
எண்ணை குறித்து வைத்துக் கொள்ள  மறவாதீர்கள்.
6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்.  அவர்களைக்
கொஞ்சம்  சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.
7.  தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள்
கை வசம் வைத்துக் கொள்ளவும்.   ( இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்.)

அன்புடன்,

அ.பஷீர் அஹமது,
ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்,
மஞ்சக்கொல்லை.


நன்றி: மின்னஞ்சல்

Wednesday, July 6, 2011

மரண அறிவிப்பு..!



நம் ஊரின் புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஜனாப். ஹமீது சுல்தான் அவர்களின் மனைவியும், அசரஃப் மற்றும் ராஜா முகமது ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. ஜெயின்ஷா அவர்கள் 05-07-11 அன்று மாலை காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா புதுப்பட்டினம் புதுமனைத்தெருவில் இருக்கும் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு, மறுநாள் காலை நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.   

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ்கொடுப்பானாக. ஆமீன்.

Wednesday, March 23, 2011

தெரியுமா உங்களுக்கு..?!!

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4--ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்
**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!

9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/

10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள். 







நன்றி: மின்னஞ்சல்

Saturday, March 12, 2011

ஜப்பானை சீரழித்த சுனாமி..!



நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் மிகவும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அந்நாட்டில் பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ இந்த சுனாமியால் முழுமையாக சிதைந்து போய் கிடக்கிறது. டோக்கியோ நகரின் வடக்குப்பகுதியில் இருந்த செண்டாய் ஏர்ப்போர்ட் முழுமையாக சுனாமியால் தாக்கப்பட்டு நிலை குலைந்து விட்டது. 150 ஆண்டுகளில் இப்படி ஒரு சுனாமியை ஜப்பான் சந்தித்ததில்லை என்று சொல்லப்படுகிறது. 

உயிரழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. கடற்கரைகளில் சுனாமியால் அடித்து செல்லப்பட்ட கார்கள், வீடுகள், மரங்கள் என்று குப்பை மேடாய் எங்கும் காட்சி அளிக்கிறது. பெரும் உயர கட்டிடங்களும் இந்த சுனாமியால் தாக்கப்பட்டு தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருக்கிறது. ஜப்பானில் உள்ள எண்ணை, எரிவாயு ஆலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது. அணு உலைகளையும் சுனாமி சிதைத்திருப்பதால் அணுக்கதிர் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்திருக்கிறது. நகரத்தின் பாலங்கள், சாலைகல் பெருத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று வரை வல்லரசாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இன்று வாழ்க்கையை தொலைத்து விட்டு வாசலில் நிற்கிறார்கள். இது தான் இவ்வுலக வாழ்க்கையின் எதார்த்தம்..!!!

ஜப்பான் முன்பு போல் மறுவாழ்வு பெற்று நிமிரவும், அந்நாட்டு மக்கள் இழந்தவற்றை பெற்று நிம்மதியான வாழ்க்கையடையவும் இறைவனை பிரார்த்திப்போம்..!

சுனாமியால் சீரழிந்த ஜப்பானின் சோகக்காட்சிகள் புகைப்படங்களாக கீழே உள்ள சுட்டியில் காணலாம்.
http://www.theatlantic.com/infocus/2011/03/earthquake-in-japan/100022/



குறிப்பு: ஜப்பானின் இந்த பேரழிவில் காணாமல் போனவர்களை தேட நம் தளத்தின் இடது பக்கத்தில் உள்ள ”ஜப்பான் சுனாமி - விபரம் தேட” என்ற தேடும் வசதியை பயன்படுத்தி, அதில் தேடி விபரம் அறியலாம். I'm looking for someone என்பதை சுட்டிய பிறகு வரும் காலி இடத்தில் தேடப்படுவரின் பெயரை கொடுத்தால் அவரின் தற்போதைய விபரம் கிடைக்கும்.