Sunday, February 27, 2011

சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி..!!





நாம் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் கடந்த 25-ந்தேதி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2011) அன்று நடந்தேறியிருக்கிறது. ஆமாம்... நமக்காக போராடி சிறை சென்ற நம் சகோதரர்கள் அனைவரும் கடந்த வெள்ளியன்று ஜாமீனில் வெளியாகியிருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டை நகரில் நடைபெற்ற இந்த இனிய நிகழ்வில் கலந்து கொள்ள கடந்த வெள்ளியன்று நமது சமுதாய  மக்கள் பட்டுக்கோட்டை நகரில் பெரும் திரளாக கூடியதைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்கள். இப்படி ஒரு கூட்டம் எங்கிருந்து வந்தது, எதற்காக வந்தது என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். மேலும் அன்றைய தினம் பட்டுக்கோட்டை நகரும், நீதி மன்ற வளாகமும் நம் சமுதாய மக்களால் நிரம்பி வழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். உண்மைக்கும், நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசாக தான் நம் சமுதாயத்தினர் அதை பார்த்தனர். சட்ட சம்பிரதாயங்கள் முடிந்து வெளியே வந்த நம் சகோதரர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க வரவேற்றது அனைவரது நெஞ்சையும் நெகிழ வைப்பதாக இருந்தது.

அன்றிரவு 9 மணிக்கெல்லாம் அவர்கள் நம் ஊர் வந்து சேர்ந்தார்கள். ஜாமீனில் வந்தவர்களை நம் மக்கள் நேரில் சென்று சந்தித்து தங்கள் அன்பையும், ஆறுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

இந்த இனிய நிகழ்வு நடைபெற நமக்காக உழைத்த நமதூர் ஜமாஅத் நிர்வாகத்தினருக்கும், ஒத்துழைத்த நம் ஊர் பொதுமக்களுக்கும், மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களுக்கும், TNTJ அமைப்பிற்கும், நண்பர்கள், நமக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினர், நமது சமுதாய ஏனைய அமைப்புகள், நமக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், நமக்காக போராடி சிறை சென்றதால் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களையும் பொறுமையுடன் தாங்கிக்கொண்ட,  நமதூர் கண்ணியத்தை தங்கள் போராட்டம் மூலம் காப்பாற்றித் தந்த, நம் வாழ்வுரிமைக்காக  சிறைசென்று நம் உரிமைகளை நிலைநாட்டிய நமது சகோதரர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும், இந்நிகழ்விற்காக எல்லா வகையிலும் ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்த வெளிநாடு வாழ் சமுதாய மக்களுக்கும், நமக்காக அன்றாடம் நடக்கும் உண்மை நிகழ்வுகளை அடிக்கடி தகவல்களாக தந்த நமது அன்புச்சகோதரர்களுக்கும் புதுப்பட்டினம் டுடே சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..!! 




தகவல் உதவி:
நன்றி: சகோ. அஹமது ஜமீல் (ahamed.jml@gmail.com)

Wednesday, February 23, 2011

சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு..!!



உம்ரா, ஹஜ், விசிட்விசாவில் சவுதி வருபவர்கள் இங்கேயே இருந்து சம்பாதிக்கும் நோக்கத்தில் தங்கி விடுகிறார்கள். குடும்ப பொருளாதாரத்தை கொண்டு அவர்கள் செய்வது சரி என்றாலும் சவுதி அரசாங்கத்தின் சட்டப்படி இது குற்றம். இன்னும் சிலரோ தங்கள் குடும்ப உறுப்பினர்களை உம்ரா, ஹஜ் கடமைகளை நிறைவேற்ற சவுதி கூட்டி வந்து, அதன்
விசா காலாவதியாகும் தேதி பற்றிய விபரம் தெரியாத அறியாமையால் தங்க வைத்து பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். இதுவும் சவுதியில் குற்றமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனையும், பெரும் அபராத தொகையும் விதிக்கப்படுகிறது. அப்படி சவுதி வந்து,  தங்கி உம்ரா, ஹஜ், விசிட் விசாக்கள் காலாவதி ஆனவர்களுக்கு ஒரு நற்செய்தி..!! சவுதி அரசு தங்கள் மன்னருக்கு நடந்து வரும் மருத்துவ சிகிச்சையின் வெற்றியை கொண்டாடும் வகையில்  இவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கி சில நாட்கள் சிறைத்தண்டனையுடன், அபராதம் எதுவுமில்லாமல் தாய் நாடு அனுப்பி வைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த பொது மன்னிப்பு வழங்கும் காலம் மார்ச் மாதம் 23, 2011-ல் முடிவடைகின்றது. எனவே விசா காலாவதியாகி இனி எப்படி தங்கள் நாட்டுக்கு போவது என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நம் சகோதரர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அவர்களுக்கு உடன் இந்த செய்தியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம். ஒரிஜினல் பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அவுட் பாஸும் (out pass), ஜவஸாத் அலுவலத்திலிருந்து உம்ரா, ஹஜ் விசாவிற்கான அத்தாட்சி கடிதத்தையும் கொண்டு செல்ல வேண்டும். அவுட் பாஸ் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட் நகலுடன், ஊரில் உள்ள ரேஷன் கார்டு அல்லது கார் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை என்று ஏதேனும் ஒரு அரசாங்க அத்தாட்சியை வைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்கும் அவுட் பாஸ் 3 மாசத்திற்கு செல்லுபடியாகும்.

இவர்கள் ஜவஸாத்தின் பாதுகாவலில் வைக்கப்பட்டு பிறகு தர்ஹீல் என்ற காவல் நிலையத்திலிருந்து நேரடியாக தாயகத்திற்கு அனுப்பப்படுவார்கள். ஹரூப் என்ற வேலையில் இருந்து ஓடிச்சென்றவர்கள் திரும்பி வந்து தன் கஃபிலிடம்  வந்து பிரச்சினைகளை  பேசி முடித்து அவரிடமிருந்து NOC (No Objection Certificate) வாங்கி வரவேண்டும்.

விசா பிரச்சினையில் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி நல்லபடியாக தாயகம் போய் சேர புதுப்பட்டினம் டுடே அவர்களை வாழ்த்துகிறது..!!



தகவல் மூலம்:
நன்றி: www.moi.gov.sa (சவுதி அரசின் இணைய தளம்)

Monday, February 21, 2011

இந்துத்வ அராஜக கும்பலால் தாக்கப்பட்ட பள்ளி..!!




இந்துத்வ சமூக விரோதிகளால் சிறுபான்மை சமூகத்தவர் தாக்குதலுக்குள்ளாவது இந்தியாவில் புதிதல்ல. குறிப்பாக சமீபகாலமாக அவர்களின் தாக்குதல்  அதிகரித்து வருகிறது. இறைவனுக்கு அடுத்த படியாக நடுநிலை இந்துக்கள் மற்றும் அரசை நம்பியே நாம் வாழ்ந்து வருகிறோம். அப்படி இருந்தும் இந்துத்வ சமூக விரோதிகளின் கொடுங்கரங்கள் நம்மை தீண்டி விடுகின்றன. அப்படித்தான் நம் ஊரில் அவர்கள் உருவாக்கிய கலவரமும்.! கலவரத்தன்று அவர்களின் வெறிக்கு பலியாகி தாக்கப்பட்ட நம் ஊர் பள்ளியின் காட்சிகள் கீழே..!!





















படங்கள் உதவி:

நன்றி:

சகோதரர்: பைஷல் அஹமது (faishal675@gmail.com)
சகோதரர்: அப்துல் ரஹ்மான் (rahman4203@gmail.com)

சமூக விரோதிகளின் தொடரும் அராஜகம்..!!



நம் ஊருக்கு அருகில் இருக்கும் ஊரான மல்லிப்பட்டினத்தில் கடந்த பிப்ரவரி மாதம், 18-ந்தேதி (2011) வெள்ளியன்று சமூக விரோத சக்திகள் மீண்டும் தங்கள் கை வரிசையை காட்டியிருக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் கடற்கரை ஓரமாக உள்ள இரண்டு கீற்று குடிசைகள் தீப்பற்றி எரிந்துள்ளது. அதை பற்ற வைத்த சமூக விரோதிகள் இருவரையும் மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வைத்து மடக்கி பிடித்து விட்டார்கள். அவர்களை உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் ஊர்ப் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணை மூலம் அவர்கள் இருவரும் கோட்டைப்பட்டினம் பக்கத்தில் உள்ள புதுப்பட்டி என்ற ஊரைச்சார்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக மல்லிப்பட்டினம் கடற்கரையில் நமது ஊர் கரையூர் தெருவைச்சார்ந்த நாகராஜ் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்கள் என்று தெரிகிறது. இதற்கு முன்பு மல்லிப்பட்டினத்தில் நடந்த இரண்டு திருட்டுகளிலும் இவர்கள் இருவரும் ஈடுபட்டுள்ளதும் விசாரணையின் மூலம் தெரிய வந்தது. கடற்கரை ஓரமிருந்த குடிசைகளுக்கு தீ வைத்ததின் மூல காரணமாக இருந்து செயல்பட்டது நம் ஊரைச்சார்ந்த நாகராஜ் என்றும் தெரிய வந்துள்ளது.

மக்களின் நிம்மதியை குலைப்பதில் சமூக விரோதிகளுக்கு ஏன் தான் இத்தனை விருப்பமென்று புரியவில்லை..!!

தகவல் உதவி:
நன்றி: சகோதரர் ஹசன் (hashanau@gmail.com)

ரியாத் மாநகரில் ஜமாத்தார்களின் கலந்துரையாடல்..!




நம் ஊரில் நடந்த மோசமான நிகழ்வான மதக்கலவரம் தொடர்பாக விவாதிக்க பிப்ரவரி 18-ந்தேதி (2011) அன்று நம் சகோதரர்கள் அனைவரும் அவரவர்கள் வாழும் நகரங்களில், நாடுகளில் கூடி விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி, கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வெள்ளிக்கிழமை நமதூரைச்சார்ந்த ரியாத் வாழ் சகோதரர்களின் கலந்துரையாடல் வெற்றிகரமாக ரியாத் நகரில் சிறப்பாக நடந்துமுடிந்தது. கூட்டத்திற்கு இது வரை கண்டிராத வகையில் பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள். கூட்டத்தின் துவக்கத்தில் நமதூரில் சமீபத்தில் இந்துத்வா நபர்கள் திட்டமிட்டு செய்த கலவரத்தின் முழு விபரம், அதன் நோக்கம் ஆகியவை விவாதிக்கப்பட்டன. இனி இது போல் ஏற்பட்டால் என்ன செய்யலாம் என்றும், இது போல் இனி நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் ஆகியவையும் பற்றி ஆலோசிக்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது. கலந்துரையாடலுக்கு செல்ல எந்தவொரு சிரமமும் இல்லாத வகையில் வாகன ஏற்பாட்டை செய்திருந்த நம் சகோதரர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.


ரியாத் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், முடிவுகள், கோரிக்கை யாவும் உடனே ஜித்தா, தமாம், ஜுபைல், மக்கா உள்ளிட்ட சவுதி பெருநகரங்களில் வாழும் சகோதரர்களுக்கும், துபை, அபுதாபி, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் வாழும் சகோதரர்களுக்கும் தொலைபேசி மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் ஊருக்கு தெரிவிக்கவும், தற்போதைய ஊர் நிலவரம் தெரிந்து கொள்ளவும் உடன் நம் ஊர் ஜமாத் தலைவர் ஜனாப். அப்துல் ஹமீது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நீண்ட நேரம் அவருடன் உரையாடிய வகையில் ஏற்பட்ட கலவரத்திற்கான காரணங்கள், அதன் பிறகு நடந்த நிகழ்வுகள், இது வரை எடுக்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ நடவடிக்கைகள், ஊரின் தற்போதைய நிலை ஆகியவற்றை குறித்து அனைவரும் அறிந்து கொண்டோம். இனி எடுக்க வேண்டிய முடிவுகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டன. இவை அனைத்தையும் மிக தெளிவாகவும், பொறுமையுடனும் விளக்கிய ஜமாத் தலைவர் ஜனாப். அப்துல் ஹமீது அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், கோரிக்கைகள் ஆகியவை எழுத்துப்பூர்வமாக எழுதப்பட்டன. அவை தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனைத்து வெளிநாடு வாழ் புதுப்பட்டினம் ஜமாத்தார்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்து தங்கள் மேலான ஆதரவு மற்றும் கருத்துக்களை வழங்கிய ஜமாத்தார்கள் அனைவருக்கும் புதுப்பட்டினம் டுடே-யின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.!!



Sunday, February 20, 2011

புதுப்பட்டினம் மதக்கலவரம் - நடந்தது என்ன..?



நம் ஊரில் ஜனவரி 28-ம் தேதியன்று இந்து முன்னணி சார்பில் அவ்வமைப்பின் கொடி ஒன்று நம் ஊர் பேருந்து நிலையம் அருகில் ஊன்றப்பட்டது. பிப்.8-ந்தேதி அன்று விஷமிகள் சிலர் அக்கொடியினை அறுத்து இருக்கின்றனர் (கலவரம் ஏற்படுத்த இந்து அவர்களே செய்திருக்கவும் வாய்ப்பிருப்பதை தெரிவிக்க விரும்புகிறோம்). இதை முஸ்லிம்கள் தான் செய்ததாக கூறி 8 முஸ்லிம்களின் பெயரை கூறி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்து முன்னணியினர்.


பிப்.11 அன்று இப்பிரச்சனையை பற்றி பேசுவதற்காக முஸ்லிம்களின் தரப்பிலிருந்து ஜமாஅத் உறுப்பினர்கள் உட்பட சில நபர்கள் காவல் நிலையத்திற்கு வருகின்றனர், அதே சமயம் இந்துக்கள் சார்பில் கொஞ்சம் பேர் அங்கு வருகின்றனர். இன்ஸ்பெக்டர் இல்லாத காரணத்தால் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப் பேச்சில் ஈடுபடுத்துகின்றார்கள். முஸ்லிம்கள் தங்களது பக்கம் நியாயம் இருப்பதாகவும், இந்தப் பிரச்சனைக்கு முஸ்லிகள் யாரும் காரணம் இல்லையென்றும், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்திருக்கும் ”பாலா” என்ற இந்துத்வவாதி இந்த ஊருக்கு திரும்பி வந்த பின்பு தான் இது போன்ற செயல்கள் நடப்பதாக தங்கள் ஊர் நிலையை கூறியவுடன் அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டு சமாதான நிலைக்கு வருகின்றனர்.


அந்த சமயம், நெடு நாட்களாக முஸ்லிம்களின் ஜும் ஆ பள்ளிக்கு எதிரில் இருக்கும் கோவிலில் தொழுகை நேரத்தில் ஒலித்து வரும் பாடல்களை நிறுத்தக்கோரி விண்ணப்பித்தும், அதை தொடர்ந்து செய்து வருவதாகவும், முஸ்லிம்களின் இறை வழிப்பாட்டிற்கு அது இடையூறாக இருப்பது பற்றி கூறி இப்பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரினர்.


அப்பொழுது வேலு என்பவர், நாங்கள் பாட்டை நிறுத்த முடியாது, நீங்கள் வேண்டுமானால் தொழுகையை நிறுத்துங்கள் என்று கூற ஆரம்பித்ததும் , முஸ்லிம்கள் மனம் புண்பட்டு வந்திருந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் கண்டனங்களை எழுப்புகின்றனர். நிலவரம் சரியில்லாமல் போவதைக் கண்ட காவல்துறையினர் பிப்.13 அன்று இரு தரப்பினரையும் வைத்து சமாதானக் கூட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு அன்றைய கூட்டத்தை கலைத்து விடுகின்றனர். முஸ்லிகள் அனைவரும் பிப்.13 அன்று காவல் துறையால் ஏற்படப்போகும் தீர்வை எதிர்நோக்கி இருக்கும் பொழுது எதிர் தரப்பு பாசிஸ்டுகளின் சதிவேலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கிறது. பிப்.11 அன்று இரவே இந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று இந்து முன்னணி சார்பில் இரகசியமாக தடை விதிக்கப்படுகின்றது.


பிப்.12 பகல் 3.00 மணி வரை ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.  மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். அன்று மாலை தொழுகை (அஸர்) ஆரம்பிக்கும் நேரத்திற்கு சற்று முன்னர், ஒரு சுமோ, ஒரு கார் மற்றும் 5 அல்லது 6 பைக்குகளில் தம்பிக்கோட்டை, மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து இந்து முன்னணியினர் புதுப்பட்டினம் வந்து சேருகின்றனர்.


முஸ்லிம்கள் எப்போதும் போல் அஸர் தொழுகைக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு வெளியில் வருகையில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மஸ்ஜிதிற்கு எதிரில் நின்று கொண்டு ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு வெளியே வருபவர்களை பழிக்கின்றனர். மேலும் முஸ்லிம்களின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கண்ட முஸ்லீம் சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவரும் தாக்குதலை எதிர் கொள்ள வேண்டி  இந்து முன்னணியினரை திருப்பித் தாக்குகின்றனர். இதில் முஸ்லிம்களின் தரப்பில் 5 பேரும் இந்து முன்னணி தரப்பில் 12 பேரும் காயம் அடைகின்றனர். இத்ரீஸ் அஹ்மது என்ற 11-வது படிக்கும் மாணவரின் மண்டை உடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்.




தகவல் அறிந்த காவல்துறை விரைந்து வந்து முஸ்லிம்களின் தரப்பில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 13 பேரை ரிமாண்ட் செய்துள்ளனர். இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்து முன்னணி சார்பில் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10 பேரை ரிமாண்ட் செய்து 9 பேரை தேடி வருகின்றனர், வெளியூரில் இருந்து திட்டமிட்ட தாக்குதலுக்கு வந்த அத்தனை இந்து முன்னணியினரும் ஓடிப்போய் விட்டனர். தற்பொழுதும் (ஞாயிற்றுக்கிழமை) நம் ஊர் எஸ்.பி.-யின் நேரடி கண்கணிப்பில், காவல் துறையின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது.

Saturday, February 19, 2011

புதுப்பட்டினம் - அறிமுகம்



அஸ்ஸலாமு அலைக்கும்..!!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்திற்கு அருகில் இருக்கும் கிராமம் தான் எங்கள் ஊரான புதுப்பட்டினம். இங்கு இந்து, முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கலந்து வாழ்கிறார்கள். இந்துக்களில் பெரும்பாலானவர்கள் கடல் சார்ந்த தொழில் செய்து வருகிறார்கள். மற்றவர்கள் வட்டிக்கு விடுதல் மற்றும் வெளிநாட்டு வேலை மூலம் சம்பாத்தியம் செய்கிறார்கள். முஸ்லீம்கள் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து சம்பாதிக்கின்றனர். மற்றவர்கள் உள்ளூரில் வியாபாரம் தொடர்புடைய தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்காக உருவாக்கப்பட்ட வலைப்பூ இது. இங்கே புதுப்பட்டினத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வாழ்க்கை சூழல், திருமணம், பிறப்பு, மரணம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புச் செய்திகள், அரசு சலுகை தொடர்பான விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் இங்கே பதிவு செய்யப்படும். புதுப்பட்டினம் தொடர்பான எந்த ஒரு செய்தியையும் pudhu.pattinam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் செய்தியின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டு இந்த வலைப்பூவில் வெளியிடப்படும். எப்பொழுதும் உங்கள் அன்பையும், ஆதரவையும் அளிப்பீர்கள் என்று நம்புகின்றோம். நன்றி..!!