Monday, March 7, 2011

நடுநிசி நாய்களின் அட்டகாசம்..!!


சில நாட்களுக்கு முன் நம் ஊர் சகோதரர் ஒருவர் என்னிடம் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதை அவர் மிகவும் வருத்தம் மற்றும் வேதனையுடன் சொன்னார். அவருக்கு ஆறுதலையும், எனக்கு தெரிந்த தீர்வையும் சொல்லிவிட்டு அந்த விஷயத்தை மறந்தே விட்டேன். ஆனால் சமீபத்தில் நம் ஊருக்கு அருகில் இருக்கும் அதிரையை சார்ந்த சகோதரர் ஒருவர் தன் வலைப்பூவில் இதே விஷயத்தை எழுதியிருந்ததையும், இது போல் பல இடங்களில் நடந்ததாக குறிப்பிட்டிருந்ததையும் படித்து அதிர்ந்து போனேன். இது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம் என்பதாலும், கவனமாக கையாளவேண்டியது என்பதாலும் இங்கே எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இந்திய முஸ்லீம்களை பொறுத்த வரை குறிப்பாக தமிழக முஸ்லீம்கள் பெரும்பாலும் வெளிநாட்டையே பொருளாதாரத்திற்காக நம்பி இருப்பது நாம் அறிந்ததே. இதற்காக நாம் மனைவி, மக்கள், குடும்பம் எனப்பிரிந்து வந்து வெளிநாடுகளில் வாழ வேண்டிய சூழல். இந்த நிலையில் இருக்கும் நம் பெண்களை தவறான வழிக்கு இழுக்கும் விதமாக சிலர் திட்டமிட்டு நடப்பது தெரிகிறது. அதை சொல்வதற்கு முன் ஒரு விஷயத்தை இங்கே சொல்ல வேண்டியது அவசியம். தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் நம் அந்தரங்கம் என்பது இல்லாமல் போய், எல்லாம் அம்பலம் ஆகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம் மின்னஞ்சலில் இருந்து தொலைபேசி உரையாடல் வரை தீயவர்கள் விரும்பினால் நாம் அறியாமலேயே அதை அவர்கள் அறியும் நிலை இருந்து வருகிறது.

குறிப்பாக இப்பொழுதெல்லாம் மனைவியுடன் பேச வேண்டும் என்றால் அதிகம் நாம் தொலைபேசியையே நாடுகிறோம். VOIP எனப்படும் இணையம் வழியிலான தொலைபேசி மலிவாகி போனதால் மணிக்கணக்கில் பேசும் நிலை இப்பொழுது இருந்து வருகிறது. வக்ர குணம் படைத்த தீயவர்கள் கணவன் மனைவி உரையாடலை கேட்கவும், பதிவு செய்து தவறான வழியில் பயன்படுத்தவும் வழி இருக்கிறது. சமீபத்தில் அப்படி நடந்த விஷயங்கள் நக்கீரன் பத்திரிக்கை மூலம் வெளியே வந்திருக்கிறது. நாம் VOIP மூலம் பேசினாலும் நாம் அழைக்கும் தொலைபேசிக்கு நம் அழைப்பு இந்திய தொலைபேசி நிறுவனங்கள் வழியாகத்தான் போகின்றன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் கேடு கெட்ட சிலர் அவற்றை ஒட்டுக்கேட்கிறார்கள். குறிப்பாக அடிக்கடி பேசப்படும், நீண்ட நேர தொலைபேசி உரையாடல்கள் இந்த நிலைக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் அவர்கள் வேலை செய்யும் பொழுது மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க தனிமை அதிகம் இருப்பதாலும், பொழுது போக்கவும் இரவில் பேசப்படும் உரையாடல்களே அதிகம் ஒட்டுக்கேட்கப்படுகின்றன.

பொதுவாக VOIP மூலம் பேசும் பொழுது அழைப்பவரின் தொலைபேசி எண்கள், அழைப்பை பெறுபவரின் தொலைபேசியில் தெரியாது. இதனால் யார் அழைக்கிறார்கள் என்பது தெரியாது என்பதால் தீயவர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. நம் ஊர் சகோதரர் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன். அவர் மனைவிக்கு இவர் இரவு நேரங்களில் வழக்கமாக அழைத்து பேசுவது வழக்கம். இது யாரோலோ மிகத்தீவிரமாக ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை அவர் பேசி முடித்த பின் அவர் மனைவி நன்றாக தூங்கும் நேரமான நள்ளிரவில் அழைப்பு வந்திருக்கிறது. எடுத்து காதில் வைத்தால் யாரும் பேசவில்லை. மூச்சு விடுவது மட்டும் தான் காதில் விழுந்திருக்கிறது. அவர் மனைவியோ தன்னிடம் கணவன் விளையாட்டுக்கு இப்படி செய்வதாக நினைத்து விட்டார். அடுத்த சில நாட்களும் இதே தொடர கணவனுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். உஷாரான அவர் இனி நடுநிசியில் நான் அழைக்க மாட்டேன், அழைப்பு வந்தால் எடுக்காதே என்று சொல்லிவிட்டார். அதன் போலவே நள்ளிரவுகளில் வந்த அழைப்புகளை எடுக்காவிட்டாலும் கைப்பேசியின் சத்தத்தால் தூக்கம் தொலைந்து போனது தான் மிச்சம். அதனால் தூங்கும் முன் கைப்பேசியை அணைத்து விட்டு வைக்க தொடங்கியிருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் இரவு 8 மணிக்கு அழைத்த ஒருவன் சகோதரரின் பெயரை சொல்லி கேட்டிருக்கிறான். பெயரை சொன்னதால் நம்பிய அவர் மனைவி என்ன விஷயம் என கேட்டிருக்கிறார். அதை காதில் வாங்கி கொள்ளாமல் சகோதரர் மனைவியின் ஊர், முகவரி எல்லாம் கேட்டிருக்கிறான். எச்சரிக்கையான சகோதரி இணைப்பை துண்டித்து விட்டிருக்கிறார். இதாவது பரவாயில்லை.. அதன் பிறகு நடந்தது தான் கவலையின் உச்சம். ஒரு முறை தன் கைப்பேசிக்கு பகலில் அழைப்பு வந்த பொழுது கணவன் அழைப்பதாக நினைத்து எடுத்து கேட்டிருக்கிறார். நம் சகோதரரின் குரலைப்போலவே, அவரின் பேச்சு நடையிலேயே நலம் விசாரித்திருக்கிறான். ஆனாலும் அது தன் கணவன் இல்லை என்று சரியாக கண்டுபிடித்த சகோதரி இணைப்பை துண்டித்து விட்டு உடன் கணவனுக்கு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் என்னிடம் இதை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக இணையத்தில் நான் தகவல் தேடிய போது இது போல் நிறைய இடங்களில் நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த பிரச்சினைக்கு நாம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு ஒன்றும் தீர்வாக இருக்க முடியாது. பெண்களின் தனிமையை பயன்படுத்தி அவர்களின் பக்கம் இழுக்கலாம் என்பது இந்த இழிபிறவிகளின் திட்டமாக இருக்கலாம். அவர்கள் திட்டம் நிறைவேறாது என்றாலும் இது மனதளவில் வெளிநாட்டில் இருக்கும் கணவர்களுக்கும், ஊரில் இருக்கும் மனைவிகளுக்கும் பெரும் மன உளைச்சலை கொடுக்கும் என்பது உறுதி.

இது போன்ற மோசமான அழைப்புகள் பெண்களுக்கு அடிக்கடி வரும் பட்சத்தில் அந்த தொலைபேசி எண்ணை உடனடியாக மாற்றி விட வேண்டும் என்பது என் எண்ணம். அதே போல் இரண்டு கைப்பேசி வைத்திருக்கும் சகோதரர்கள் தன் இருக்கும் நாட்டின் கைப்பேசி எண்ணிலிருந்து ஒரு முறை அழைத்து (missed call) பிறகு VOIP மூலம் அழைக்கலாம். இதன் மூலம் அழைப்பது தன் கணவர் தான் என்று மனைவி உறுதி செய்த பின் அழைப்பை எடுக்கலாம். அது மட்டுமல்லாமல், மனைவியின் தொலைபேசி எண்ணை தேவையில்லாமல் மற்றவர்களிடம் கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். பேசும் பொழுது நம்முடைய பெயர், முகவரி உள்ளிட்ட முக்கிய விபரங்களை பேசக்கூடாது. இப்படி எல்லாம் செய்வதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

திருடன் திருந்துவான் என்று எதிர்பார்ப்பது தவறு. அவன் குற்றம் செய்ய வாய்ப்பை நாம் ஏற்படுத்தி கொடுக்காமல் எச்சரிக்கையாக இருப்பதே இதற்கு நிரந்தர தீர்வு..!!

0 comments:

Post a Comment