Monday, February 21, 2011

ரியாத் மாநகரில் ஜமாத்தார்களின் கலந்துரையாடல்..!




நம் ஊரில் நடந்த மோசமான நிகழ்வான மதக்கலவரம் தொடர்பாக விவாதிக்க பிப்ரவரி 18-ந்தேதி (2011) அன்று நம் சகோதரர்கள் அனைவரும் அவரவர்கள் வாழும் நகரங்களில், நாடுகளில் கூடி விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி, கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வெள்ளிக்கிழமை நமதூரைச்சார்ந்த ரியாத் வாழ் சகோதரர்களின் கலந்துரையாடல் வெற்றிகரமாக ரியாத் நகரில் சிறப்பாக நடந்துமுடிந்தது. கூட்டத்திற்கு இது வரை கண்டிராத வகையில் பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள். கூட்டத்தின் துவக்கத்தில் நமதூரில் சமீபத்தில் இந்துத்வா நபர்கள் திட்டமிட்டு செய்த கலவரத்தின் முழு விபரம், அதன் நோக்கம் ஆகியவை விவாதிக்கப்பட்டன. இனி இது போல் ஏற்பட்டால் என்ன செய்யலாம் என்றும், இது போல் இனி நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும் ஆகியவையும் பற்றி ஆலோசிக்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது. கலந்துரையாடலுக்கு செல்ல எந்தவொரு சிரமமும் இல்லாத வகையில் வாகன ஏற்பாட்டை செய்திருந்த நம் சகோதரர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.


ரியாத் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், முடிவுகள், கோரிக்கை யாவும் உடனே ஜித்தா, தமாம், ஜுபைல், மக்கா உள்ளிட்ட சவுதி பெருநகரங்களில் வாழும் சகோதரர்களுக்கும், துபை, அபுதாபி, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் வாழும் சகோதரர்களுக்கும் தொலைபேசி மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் ஊருக்கு தெரிவிக்கவும், தற்போதைய ஊர் நிலவரம் தெரிந்து கொள்ளவும் உடன் நம் ஊர் ஜமாத் தலைவர் ஜனாப். அப்துல் ஹமீது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நீண்ட நேரம் அவருடன் உரையாடிய வகையில் ஏற்பட்ட கலவரத்திற்கான காரணங்கள், அதன் பிறகு நடந்த நிகழ்வுகள், இது வரை எடுக்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ நடவடிக்கைகள், ஊரின் தற்போதைய நிலை ஆகியவற்றை குறித்து அனைவரும் அறிந்து கொண்டோம். இனி எடுக்க வேண்டிய முடிவுகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டன. இவை அனைத்தையும் மிக தெளிவாகவும், பொறுமையுடனும் விளக்கிய ஜமாத் தலைவர் ஜனாப். அப்துல் ஹமீது அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், கோரிக்கைகள் ஆகியவை எழுத்துப்பூர்வமாக எழுதப்பட்டன. அவை தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனைத்து வெளிநாடு வாழ் புதுப்பட்டினம் ஜமாத்தார்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்து தங்கள் மேலான ஆதரவு மற்றும் கருத்துக்களை வழங்கிய ஜமாத்தார்கள் அனைவருக்கும் புதுப்பட்டினம் டுடே-யின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.!!



0 comments:

Post a Comment